Tuesday 28 June 2011

அறிந்ததனின்று விடுதலை



மனிதன் தேடிக்கொண்டேயிருந்தது - சித்ரவதைப்பட்ட மனம் - பரம்பரைப் போக்கு - மதிப்பு என்னும் வலை - மனிதனும் தனிஒருவனும் - வாழ்க்கைப் போர் - மனிதனது அடிப்படை இயல்பு - பொறுப்புணர்ச்சி - உண்மை - தானாகவே அடையும் புதுமலர்ச்சி - சத்தியின் சிதறல் - வழிகாட்டியினின்றும் விடுதலை.

தனக்கும் அப்பாற்பட்ட ஒன்றினை, தன் மண்ணுலக வாழ்க்கை நலனுக்கும் அப்பாற்பட்ட ஒன்றினை, மனிதன் தொன்று தொட்டே, காலமெல்லாம் தேடி அலைந்திருக்கிறான். அதனை பல பெயர் கொண்டு அழைக்கின்றோம். உண்மை, கடவுள்,மெய்ப்பொருள்,காலங்கடந்தநிலை என்று பலவாறு பெயர் சொல்லி
அழைக்கின்றோம். என்ன நேரிடினும் அது தன் நிலை குலையாதது; சிந்தனையால் அசைக்க முடியாதது; மனித வாழ்க்கையின் ஊழல்களால் மாசு அடையாதது.
எப்போதுமே மனிதன் கேட்டு வந்த கேள்வி இதுதான்! "இந்த வாழ்க்கை நம்மை எங்கே இட்டுச் செல்லுகின்றது? வாழ்க்கை என்பதற்கு உட்பொருள் ஏதேனும் உண்டா? வாழ்க்கையில் அவன் காண்பதெல்லாம் மாபெரும் குழப்பங்கள்,மிருகத்தனம் வாய்ந்த வன்முறைச் செயல்கள், எதிர்ப்புகள், போர்கள்,போராட்டங்கள்,சமயம்,கருத்துருவமான வாழ்க்கைத்திட்டம்,நாடு என்ற அடிப்படைகளில் கணக்கற்ற பிளவுகள், இவைகளே. இவைகள் யாவையும் கண்ணுற்ற அவன் தன் உள்ளத்தின் ஆழத்தில் செயலாற்றும் வகையறியாது ஊன்றி நிற்கும் ஒரு தவிப்புடன் கேட்கிறான்:"வாழ்க்கையில் ஈடுபட்ட ஒருவன் செய்வது யாது? வாழ்க்கை என்று நாம் சொல்வதன் பொருள்தான் என்ன? இதற்கும் அப்பாற்பட்ட பொருளும் ஒன்று உண்டா?" ஆயிரம் பெயர்கள் கொண்டும், பெயர் ஒன்றுமேயில்லாத இப்பொருளினை இடைவிடாமல் தேடித் தேடிக் காணாத அவன் நம்பிக்கை என்ற ஒன்றினை வளர்த்துள்ளான். அது நம்மைக் காப்பற்றும் இரட்சகர் ஒருவரிடமோ,அல்லது ஒரு இலட்சியம், அல்லது குறிக்கோள் ஒன்றினிலோ வைத்த நம்பிக்கை.
எதுவானால் என்ன? நம்பிக்கை என்பது தவிர்க்க முடியாத வகையில் வன்முறை என்பதையே வளர்க்கிறது. வாழ்க்கை என்று நாம் சொல்லும், இந்த ஓயாத போரில், நாம் எத்தகைய சமூகத்தில் வளர்க்கப்படுகின்றோமோ அதற்குரிய சில நடைமுறை விதிவிலக்குகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அது 'கம்யூனிச' சமுதாயமானாலும் சரி, எல்லோருக்கும் சுதந்திரம் என்று சொல்லப்படும் சமுதாயமானாலும் சரி அதற்குரிய விதிவிலக்குகளை அமைத்துக் கொள்கிறோம். இந்துக்களாயினும் சரி, முஸ்லிம்களாயினும் சரி, கிரிஸ்துவர்களாயினும் சரி, அல்லது வேறு எவ்வகையினராயினும் சரி, அந்தந்த பரம்பரை வாழ்க்கையின் மரபுக்கு உகந்த நடைமுறையின் தரத்தினையும் ஏற்றுக்கொள்கின்றோம்.நாம் நடந்துகொள்ளும் முறை சரியா,தப்பா,நாம் நினைப்பது சரியா,தப்பா,என்பதை வேறு யாராவது ஒருவர் அறுதியிட்டுக் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். எவரோ ஏற்க்கனவே வகுத்துவைத்த வாழ்க்கை நெறியினைப் பின்பற்றுகின்றோம். அதனால் நமது நடத்தையும் நினைவும் இயந்திரம்போல் இயங்கவும் சிந்தனையின்றிச் செயலாற்றுவதும் நேரிடுகின்றது. நமது வாழ்க்கையில் இவ்வாறு நிகழ்வதனை நாமே கண்கூடாகக் காணமுடியும்.
இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்த குருமார்களும், வழிகாட்டிகளும், புனிதநல்லோர்களும், தாங்கள்இயற்றிய நூல்களைக்கொண்டு குழந்தைகளைப் பாலூட்டி வளர்ப்பதுபோல், நம்மை ஊட்டி வளர்த்து வந்துள்ளனர். "அதோ காணும் அந்த மலைக்கும், குன்றிற்கும், நிலப்பரப்பிற்கும் அப்பால் மறைந்து நிற்பதனைப் பற்றி எல்லாம் எனக்கு நீங்கள் எடுத்துச்சொல்லுங்கள்"என்று நாம் கேட்டுக்கொண்டே வந்திருக்கின்றோம்.அவர்கள் சித்தரித்துக்காட்டிய தோற்றத்தினையே ஏற்று மனநிறைவு அடைகின்றோம். அதாவது நமதுவாழ்க்கை ஊட்டம் பெறுவதெல்லாம் மற்றவர்கள் சொற்களின் மூலம்தான்.அதனால் அந்தவாழ்க்கையில் ஆழமும் பொருளுமின்றி, அதனை அவ்வாறு வாழும் நாம்
இரண்டாந்தர மக்களாகவும் ஆகிவிடுகின்றோம். நாம் விருப்பு வெறுப்புக்கள், அல்லது உள்ளப் போக்குகள் இவற்றினால் இழுக்கப்படுதல், நம் சூழ்நிலை அல்லதுவாழ்க்கை நடப்புகள் இவற்றினால் உந்தப்படுதல், பிறர் சொற்படி வாழ்தல் இவை தாம்நமதுவாழ்க்கை நெறியாக அமைந்துவிடுகின்றன. பலவகைத்
தூண்டுதல்களினால் முற்றும் உருவாக்கப் பட்டவர்ளாக விளங்குகின்றோம்.நம்மிலிருந்தே புதுமையாக முதன்முதல் தோன்றியதாக ஒன்றுமில்லை. நாமாகக் கண்டுபிடித்தது என்றும் ஒன்றுமில்லை. தானே விளைந்ததாய், துய்மையானதாய், தெளிவானதாய், நமது உள்ளத்தில் எதுவுமே இல்லை.